ஏழை மக்களுக்கு உதவுபவர்களை தி.மு.க., - காங்., இழிவுபடுத்துகின்றன அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
புதுச்சேரி: 'ஏழை மக்களுக்கு உதவுபவர்களை தி.மு.க., - காங்., கட்சிகள் இழிவுபடுத்துகின்றன' என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டி யுள்ளார். அவர், கூறியதாவது: கட்சி கட்டுப்பாட்டை மீறி அ.தி.மு.க.,வுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்படும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரத்தையும் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு பொதுக்குழு வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியதை புதுச்சேரி அ.தி.மு.க., வரவேற்கிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி சிறப்பு வாக்காளர் திருத்தல் பணி சம்பந்தமாக பொய் புகாரை கூறியுள்ளார். 80 ரூபாய் பெற்றுக்கொண்டு ஆதார் மையத்தில் இருந்து பெயர்களை நீக்குவதாக கூறியிருப்பது அப்பட்டமான பொய். இது போன்ற நபர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்களுக்கு பணி செய்வதற்கு அரசியல் கட்சி, அமைப்பு தொடங்கலாம். ஏழை மக்களுக்கு உதவிகளையும் செய்யலாம். அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்பது தேர்தல் நேரத்தில் தெரியும். ஆனால், மனிதாபிமானத்தில் உதவி செய்யக்கூடிய நபர்களை, காங்., - தி.மு.க., கட்சிகள் இழிவுபடுத்துகின்றன. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தி.மு.க., அமைப்பாளர் சிவா ஆகியோர் மக்களுக்கு உதவி செய்பவர்களையும், உதவி பெறும் மக்களையும் இழிவுப்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். மாநில அ.தி.மு.க., இணைச் செயலாளர் கணேசன், நகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.