அருணாச்சல பிரதேசம் மிசோரம் உதயநாள் விழா
புதுச்சேரி: அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் விழா கவர்னர் மாளிகையில் நேற்று கொண்டாடப்பட்டது.கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். விழாவில், புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் பயிலும் அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் இரண்டு மாநிலங்களின் கலை கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், கவர்னரின் செயலர் மணிகண்டன், டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் ஆகியோர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.விழாவில், கவர்னர் பேசுகையில், 'பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, மாநில மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும், நம்முடைய பன்முக கலாசாரத்தை, பாரம்பரியத்தை நாம் கொண்டாடி வருகிறோம்.மத்திய அரசு எடுத்து வரும் முயற்சியால் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது நல்ல உள்கட்டமைப்பு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. புதுச்சேரியின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்காற்றி வருகிறீர்கள். வடகிழக்கு மாநில மக்களின் நலனைப் பாதுகாக்க புதுச்சேரி அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளும்' என்றார்.