திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 25ம் தேதி திருவெண்பா விழா துவங்கியது. தினசரி காலை மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, சுவாமி உள் புறப்பாடு நடந்து வந்தது. 9ம் நாள் விழாவாக 2ம் தேதி சுந்தரமூர்த்திநாயனாருக்கு சிறப்பு அபிேஷகம், இரவு வெள்ளை சாத்துபடி தரிசனம் நடந்தது. நேற்று 10ம் நாள் உற்சவத்தில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. காலை நடராஜருக்கு 32 திரவியங்களை கொண்டு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட நடராஜர் மற்றும் அம்பாளுக்கு தனித்தனியாக ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சுவாமி மாட வீதியுலா நடந்தது. தென்கோபுர வீதி வழியாக வந்ததும், நடராஜரிடம் அம்பாள் கோபித்துக்கொண்டு தனியா சென்றார். தென்கோபுர வீதியில் நடராஜரையும், அம்பாளையும் சுந்தரமூர்த்தி நாயனார் சமாதானம் செய்து, கோவிலுக்குள் அழைத்து வந்தார். பிற்பகல் திருக்காமீஸ்வரர் கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் ஆருத்ரா தரிசனம் நிறைவுபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.