| ADDED : நவ 16, 2025 03:25 AM
போ லி ஷேர் மார்க்கெட் டிரேடிங்கில், முதலீடு செய்த, ஆசிரம ஊழியர் ரூ. 6.35 கோடியை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். புதுச்சேரி, வாழைக்குளம் அப்பாவு நகரை சேர்ந்தவர் அஷித்குமார் மித்ரா, 75; ஆசிரம ஊழியர். ஷேர் மார்க்கெட் டிரேடிங்கில் முதலீடு செய்வது தொடர்பாக ஆன்லைனில் தேடியுள்ளார். இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட மர்மநபர் ஷேர் மார்க்கெட் டிரேடிங்கில் முதலீடு செய்வது எப்படி திறமையாக சம்பாதிக்கலாம். அதிக லாபத்தை தரும் டிரேடிங் நிறுவனங்கள் குறித்து தகவல்களை தெரிவித்துள் ளார் மேலும், முதலீடு செய்வதற்கான ஷேர் மார்க்கெட் டிரேடிங் லிங்க் ஒன்றை அனுப்பியுள்ளார். இதைநம்பிய ஆசிரம ஊழியர் அந்த ஷேர் மார்க்கெட் டிரேடிங் லிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 6 கோடியே 35 லட்சத்து 94 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். அதன்மூலம் அவருக்கு 12 கோடியே 46 லட்சத்து 87 ஆயிரத்து 130 ரூபாய் லாபம் வந்துள்ளதாக, அவரது கணக்கில் காட்டியுள்ளது. இதையடுத்து, அந்த பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் போலி ஆன்லைன் ஷேர் மார்க்கெட் வர்த்தகத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், வாணரப்பேட்டை, பொறியாளர் தோட்டத்தை சேர்ந்தவர் பஹார்தீன், 37. இவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதை நம்பி, 3 லட்சம் ரூபாயை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். பின், அதில் கிடைத்த 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.