| ADDED : மார் 19, 2024 05:21 AM
புதுச்சேரி: புதிய பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிய தமிழக அரசு பஸ் நடத்துனரை தாக்கிய தனியார் பஸ் புரோக்கர்கள் மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், புதுத்தெருவைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன், 57; தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் பஸ்சில் பணியாற்றினார். பஸ் சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி பஸ் நிலையம் வந்தது. பஸ் நிலைய அய்யனார் கோவில் அருகே பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டிருந்தார். அப்போது சிதம்பரம் செல்ல வேண்டிய பயணிகள் சிலர் அரசு பஸ்சில் ஏற்றினர்.ஏற்கனவே பஸ் நிலையத்தில் நின்றிருந்த என்.டி. பஸ் புரோக்கர்கள் ரகுராமன், சக்திவேல் மற்றும் ஜூலு ஆகியோர், ஏன் இங்கு வந்து பயணிகளை ஏற்றுகிறாய் என கேட்டு, கொளஞ்சியப்பனிடம் தகராறு செய்து தாக்கினர். அரசு பஸ் டிரைவர் சின்னதுரை தடுத்தார்.தாக்குதலில் காயமடைந்த கொளஞ்சியப்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பான புகாரின்பேரில், உருளையன்பேட்டை போலீசார் ரகுராமன், சக்திவேல், ஜூலு ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.