ஏனாமில் இன்று தணிக்கை கூட்டம் 18 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
புதுச்சேரி : ஏனாமில் இன்று நடக்கும் அரசுத்துறைகள் மீதான தணிக்கை கூட்டத்தில், 18 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர். புதுச்சேரி அரசின் வரவு செலவினங்களை, மத்திய தணிக்கை குழு ஆய்வு செய்கிறது. இந்த தணிக்கை அறிக்கை கவர்னருக்கும், சட்டசபையிலும் வைக்கப்படுகிறது. இதேபோல, பொதுக்கணக்கு குழுவிலும், சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது.சரி வர கணக்குகளை சமர்ப்பிக்காத அரசு துறைகளுக்கு விளக்கம் கேட்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் கணக்குகளை சமர்ப்பிக்க பொது கணக்கு குழு மற்றும் தணிக்கை குழு அறிவுறுத்தல்களை வழங்குகின்றன.கடந்த காலங்களில், புதுச்சேரியில் மட்டும், அரசுத்துறைகள் மீது வைக்கப்படும், மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை கூட்டம் நடத்தப்படும். தற்போது ஒவ்வொரு பிராந்தியத்திலும் இந்த கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏற்கனவே, புதுச்சேரி, காரைக்கால், மாகி பிராந்தியங்களில் மத்திய தணிக்கை அறிக்கை மீதான கூட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த வரிசையில் ஏனாம் பிராந்தியத்தில், இன்று, 16,ம் தேதி நடக்கிறது. சபாநாயகர் செல்வம் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், பொதுக்கணக்கு குழு சேர்மன் ரமேஷ், சென்னை முதன்மை கணக்காய்வு தலைவர் ஆனந்த், பொதுக்கணக்கு குழு மதிப்பீட்டு குழுவை சேர்ந்த, 18 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர். அனைவரும் நேற்று ஏனாம் சென்றனர்.