| ADDED : நவ 26, 2025 07:41 AM
புதுச்சேரி மாநிலத்திற்கு தினசரி 540 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி குறையும்போது புதுச்சேரிக்கு வரும் மின்சார அளவும் குறைந்து அடிக்கடி மின்சார தட்டுப்பாடுதலைதுாக்குகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பற்றாக்குறை ஏற்பட்டு மின் தடையும் ஏற்படுகின்றது.இது போன்ற சூழ்நிலையில், புதுச்சேரிக்கு பகலில் வரும் சோலார் உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல மின்விநியோகத்தில் 50 மெகாவாட் மின்சாரத்தை அதிக திறனுடைய பேட்டரி கட்டமைப்பில் சேமித்து இரவில்,பீக் ஹவர் நேரங்களில் பயன்படுத்த மின் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டமைப்புகள் விரைவில் துணை மின் நிலையங்களில் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர் பணிகளையும் வேகப்படுத்தி வருகின்றது. இது குறித்து மின் துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் கூறியதாவது: மாநிலத்தில் மொத்தம் 23 துணை மின் நிலையங்கள் உள்ளன. இதில் மரப்பாலம், காலாப்பட்டு, வில்லியனுார், காரைக்கால், ஏனாம் உள்பட 10 துணை மின் நிலையங்களில் இந்த பேட்டரி மின்சார சேமிப்பு கட்டமைப்பினை ஏற்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் 5 மெகாவாட் வீதம் 10 துணை மின்நிலையங்களில் 50 மெகாவாட் பகலில் சேமித்து வைக்கப்படும். பீக் ஹவர் நேரங்களில் மின் தேவை அதிகரிக்கும்போது, இந்த பேட்டரி ஸ்டோரேஜ் மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் தொடர்ச்சியாக 4 மணி நேரம் இரவில் பீக் ஹவர் நேரங்களில் மின் தேவையை சமாளிக்க முடியும் என்றார். அரசுக்கு சேமிப்பு புதுச்சேரிக்கு பகலில் வரும் மின்சாரத்தை மின் துறை யூனிட்டிற்கு 4 ரூபாய் வரை வாங்குகிறது. ஆனால் இரவில் மின் கொள்முதல் செலவு அதிகம். சில நேரங்களில் இரவில் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மின்சார கொள்முதல் விலை எகிறும். 10 ரூபாய் தொடும் போது, புதுச்சேரி அரசு பெரும்பாலும் வாங்குவதே இல்லை. இனி பகலில் குறைந்த விலையில் கிடைக்கும் புதுப்பிக்கவல்ல மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து இரவில் பயன்படுத்தப்பட உள்ளதால் அரசுக்கும் பல கோடி மிச்சமாகும். கைகொடுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் முன்பெல்லாம் மாலை 6 மணி முதல் 9 மணி வரை மின்சார பயன்பாடு அதிகம் தேவைப்படும். இது தான் பீக் ஹவராக இருந்தது. இப்போது இரவு 9 மணி முதல் 12 மணி வரை பீக் ஹவராக மாறிவிட்டது. ஜொலிக்கும் ஓட்டல்கள், ரெஸ்ட்ரோபார்கள், ஏசி பயன்பாடு அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம். எனவே இந்த பேட்டரி மின்சார சேமிப்பு கட்டமைப்பு நள்ளிரவு வரை புதுச்சேரியின் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க உதவும். குறிப்பாக கோடைக்காலங்களில் பெரிதும் கைகொடுக்கும்.