ஆபத்தை உணராமல் கடலில் குளியல்
புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளித்தனர். புதுச்சேரி கடற்கரை பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும், கடலின் கோர முகம் பலருக்கு தெரியாது. கடல் அலையின் சீற்றம், கரையோரம் உள்ள ஆழமான பகுதி காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் கடலில் குளித்த 60க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர்.இதனால் புதுச்சேரி கடலில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். பெரியக்கடை மற்றும் ஒதியஞ்சாலை போலீசார் கடலில் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகளை அடிக்கடி எச்சரித்து வெளியே அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால், கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆபத்தை உணராமல் சில சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளித்தனர். கடல் அலையில் சிக்கும் சுற்றுலா பயணிகளை காப்பாற்ற நியமிக்கப்பட்ட மீட்பு குழுவினரும் நேற்று கடற்கரையில் மிஸ் ஆகி இருந்தனர்.