ஐ.பி.எல்., டிக்கெட் முன்பதிவு செய்து ரூ. 33,000 இழந்த வில்லியனுார் நபர்
புதுச்சேரி : புதுச்சேரியில் 10 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.1.11 லட்சம் இழந்துள்ளனர்.வில்லியனுார், முத்து பிள்ளைபாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர், சமூக வலைதளத்தில் வந்த ஐ.பி.எல்., டிக்கெட் விற்பனை தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். இதை நம்பிய, ரஞ்சித் விளம்பரத்தில் இருந்த ஆன்லைனில் 33 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ஐ.பி.எல்., டிக்கெட் முன்பதிவு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தார். உருளையன்பேட்டையை சேர்ந்த சுகஷினி என்பவர், இன்ஸ்டாகிராமில் குறைந்த விலையில் ஐபோன் விற்பனை விளம்பரத்தை பார்த்துள்ளார். அதனை உண்மை என நம்பி, 11 ஆயிரத்து 747 ரூபாய் செலுத்தி ஐபோன் ஆர்டர் செய்து ஏமாந்தார். முத்தியால்பேட்டை சேர்ந்த ராஜேஷ்குமார், குறைந்த வட்டியில் லோன் தருவதாக மர்மநபர் கூறியதை நம்பி, 12 ஆயிரம் ரூபாய் ஏமாந்துள்ளார். இதேபோல், நைனார்மண்டபம் பவித்ரா 18 ஆயிரத்து 200, சின்னகடை உமாபதி 11 ஆயிரம், லாஸ்பேட்டை ரவி 11 ஆயிரம், புதுச்சேரி சங்கர் 3 ஆயிரத்து 800, காமராஜர் நகர் வெங்கடேஷ் 3 ஆயிரத்து 500, திலாஸ்பேட்டை ஜெயகுமார் 5 ஆயிரம், முதலியார்பேட்டை பிரபாகர் 2 ஆயிரத்து 500 என, மொத்தம் 10 பேர் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 700 ரூபாய் ஏமாந்துள்ளனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.