உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குப்பைகளை அகற்றாததால் எம்.எல்.ஏ., தலைமையில் மறியல்

குப்பைகளை அகற்றாததால் எம்.எல்.ஏ., தலைமையில் மறியல்

வில்லியனுார்:  ஊசுடு தொகுதியில் குப்பை அகற்றாமல் அலட்சியம் செய்யும் நிறுவனத்தை கண்டித்து கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த சாலை மறியலால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.  ஊசுடு தொகுதியில் சேதாரப்பட்டு, தொண்டமாநத்தம், பிள்ளையார்க்குப்பம், கூடப்பாக்கம், பொறையூர்–அகரம் மற்றும் குரும்மாபேட்டை ஆகிய ஆறு கிராம பஞ்சாத்துகளில்  குப்பைகளை அகற்றும் பணியை எச்.ஆர்.ஸ்கொயர் மற்றும் கிரீன் வாரியர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஊசுடு தொகுதிக்கு ஒரு இன்சார்ஜ் மற்றும் 6 சூப்பர் வைசர்கள் மேற்பார்வையில் 30க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக  பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதனை தொடர்ந்து தொகுதியில் குப்பை அகற்றும் பணியில் ஏற்பட்டுள்ள அலட்சியத்தை கண்டித்தும், தொகுதி முழுதும் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமையில் ஊசுடு தொகுதி மக்கள் பத்துக்கண்ணு சதுக்கத்தில  சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு பகுதி எஸ்.பி., சுப்ரமணியன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகர் ஆகியோர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.   அதில், குப்பை பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை ஏற்று, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் ஒரு  மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தனியார் மற்றும் அரசு  ஊழியர்கள், பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி