சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பிய சிறுவன் மீட்பு
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பி சென்ற, மேலும் ஒரு சிறுவனை, போலீசார் மீட்டு, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர். திருட்டு வழக்கில், வில்லியனுாரை சேர்ந்த 2 சிறுவர்கள் மற்றும் காரைக்காலை சேர்ந்த ஒரு சிறுவன் ஆகிய 3 சிறுவர்களை, அந்தந்த பகுதிகுட்பட்ட போலீசார், கடந்த மாதம் கைது செய்து, அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தங்கியிருந்த சிறுவர்கள், அறையில் இருந்த ஜன்னல் கம்பிகளை உடைத்து, மெயின் கேட் கதவு, பூட்டை திறந்து கொண்டு, கடந்த 24ம் தேதி தப்பி சென்றனர். இதுகுறித்து, சமூக நலத்துறை துணை இயக்குனர் கார்த்திக்கேயன், அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, வில்லியனுாரில் இருந்த 2 சிறுவர்களை மீட்டு, அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த காரைக்காலை சேர்ந்த சிறுவனை, வில்லியனுார் மாதா கோவில் அருகே போலீசார் கண்டுபிடித்து, சிறுவனை மீட்டனர். பின்னர் சிறுவனை, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் நேற்று ஒப்படைத்தனர்.