விழுப்புரம் - நாகை புறவழிச்சாலையில் பைக் மீது கார் மோதி கவிழ்ந்தது
பாகூர் : விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலையில், கார் மோதி பைக்கில் சென்ற வாலிபர் படுகாயமடைந்தார். கடலுாரில் இருந்து விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக புதுச்சேரி நோக்கி நேற்று இரவு 7:00 மணியளவில், மகேந்திரா எக்ஸ்.யூ.வி., 3 எக்ஸ்.ஓ என்ற கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. பாகூர் அடுத்த பின்னாச்சிக்குப்பம் சந்திப்பு அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த ஸ்பிளெண்டர் பைக் மீது கார் மோதியது. இதில், பைக்கில் வந்த வாலிபர் சாலையில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் ஏர்பேக் வெளியேறியதால் அதில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினர். அருகில் இருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்த கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, விசாரணை நடத்தினர்.விபத்தில் காயமடைந்த வாலிபர் நெய்வேலியை சேர்ந்த ராஜ்குமார், 26; என்பதும், உள்ளேரிப்பட்டில் தங்கி, நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. தொடரும் விபத்து விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலையில், பின்னாட்சிக்குப்பம் - பாகூர்சாலை சந்திப்பில் வாகனங்கள் கடந்து செல்ல தடை செய்து, தேசிய நெடுஞ்சாலை துறை மூடியது. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அங்கு மேம்பாலம் கட்ட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பின்னாட்சிக்குப்பம் சாலை சந்திப்பு மூடாமல் விடப்பட்டது. இந்நிலையில், அந்த சாலை சந்திப்பில்,வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர் கதையாக உள்ளது. விபத்துக்களை தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.