உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக மோசடி போலி ஆவணம் தயாரித்த 3 பேர் மீது வழக்கு

ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக மோசடி போலி ஆவணம் தயாரித்த 3 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: ஜிப்மரில் நர்சிங் வேலை வாங்கி தருவதாக கூறி, போலி ஆவணங்கள் தயாரித்து வழங்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மயிலாடுதுறை, தரங்கங்படியை சேர்ந்தவர் ஜெயக்கொடி, 53. இவருக்கும், புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த விக்கி (எ) ராஜகணபதி, 35; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு ஏப்., மாதம் ஜிப்மரில் நர்சிங் வேலை வாங்கி தருவதாக ஜெயக்கொடியிடம், ராஜகணபதி ஆசை வார்த்தை கூறினார்.இதைநம்பி, ஜெயக்கொடி தனக்கு தெரிந்த காரைக்காலை சேர்ந்த சகாயமேரியுடன் இணைந்து ஜிப்மரில் நர்சிங் வேலைக்காக 16 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை ராஜகணபதியிடம் கொடுத்தனர். பணம் கொடுத்து பல மாதங்கள் கடந்ததால், வேலை தொடர்பாக ராஜகணபதியிடம், ஜெயக்கொடி கேட்டபோது, சில நாட்களில் பணி ஆணை வந்து விடும் என, கூறியுள்ளார். இந்நிலையில், ராஜகணபதி ஜிப்மரின் ஐ.டி., கார்டு, பணி ஆணை, சம்பள விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து, ஜெயக்கொடி மற்றும் சகாயமேரிக்கு அனுப்பியுள்ளார்.ஆவணங்கள் ஜிப்மரில் இருந்து வராமல் ராஜகணபதியே அனுப்பியதால் சந்தேகமடைந்த ஜெயக்கொடி, இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், விக்கி (எ) ராஜகணபதி, கோட்டுச்சேரி நீலமேகன், திருநாள்ளார் காயத்திரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதனிடையே, விக்கி (எ) ராஜகணபதி கடந்த மாதம் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி