பைக்குகள் மோதல் :போலீஸ்காரர் உட்பட 3 பேர் மீது வழக்கு
திருக்கனுார்: பைக்குகள் மோதிக் கொண்ட தகராறில் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டைச் சேர்ந்தவர் விநாயகம், 40; பெயிண்டர். இவர் கடந்த 6 ம் தேதி இரவு, அப்பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றங்கரைக்கு தனது பைக்கில் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, திருக்கனுாரில் ஐவேலிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த பிரதீப், விநாயகம் ஓட்டி வந்த பைக் மீது மோதியுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்குவந்த பிரதீப் நண்பர்களான ஐவேலியை சேர்ந்த ஐ.ஆர்.பி.என் போலீஸ் வீரமணி மற்றும் வசந்தகுமார் ஆகியோர் விநாயகத்தை திட்டி, கல்லால் தாக்கினர். இதில், படுகாயமடைந்த விநாயகத்தை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார், ஐ.ஆர்.பி.என். போலீஸ் வீரமணி, வசந்தகுமார், பிரதீப் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.