அங்காளன் எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல் அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு
புதுச்சேரி : அங்காளன் எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல் விடுத்த அரசு ஊழியர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.புதுச்சேரி திருபுவனை (தனி) தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன். இவரை, கடந்த 26ம் தேதி மொபைல் போனில், அரசு ஊழியர் உளவாய்க்கால் சந்திரசேகரன் என்பவர் தொடர்பு கொண்டார்.அப்போது, 'கடந்த தேர்தலில் எங்கள் தயவால் நீ எம்.எல்.ஏ.,வாக தேர்வானாய்' என, ஒருமையில் பேசினார்.கடந்த 17ம் தேதி காமராஜர் தொகுதியில் நடந்த பரிசளிப்பு விழாவில், லாட்டரி அதிபர் மகன் காலில் அங்காளன் எம்.எல்.ஏ, விழுந்தது குறித்து அவதுாறாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார்.இது தொடர்பாக அங்காளன் எம்.எல்.ஏ., திருபுவனை போலீசில் புகார் அளித்தார். சந்திரசேகரன் மீது அவதுாறு பேசுதல், கொலை மிரட்டல், இரு குழுக்களுக்கு இடையில் வெறுப்பு பேச்சு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.