தொழில் கொள்கை சட்டத்தில் மாற்றம்
புதுச்சேரி: கடந்த கால தொழில் கொள்கை, சட்டங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த ஆலோசித்து வருகிறோம் என அமைச்சர் நமச்சிவாயம் பேசினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், புதுச்சேரி தொழில் வணிகத் துறை சார்பில், தொழில்துறையினர் கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஓட்டல் அக்கார்டில் நேற்று நடந்தது. 'புதுச்சேரி சிறிய, நடுத்தர தொழில்களுக்கான ஒரு நுழைவுவாயில்' என்ற தலைப்பில் நடந்த இந்த கலந்துரையாடலில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக சென்னை பிரிவு தலைவர் விஜயகுமார், தொழில்துறை செயலர் விக்ராந்த் ராஜா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கோவிந்தராஜன், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவேன் என பிரதமர் கூறினார். பெஸ்ட் என்றால் பிசினஸ், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா. பிரதமர் கூறியதை போன்று இத்துறையில் நல்ல திட்டங்களை உருவாக்கியுள்ளோம். சேதராப்பட்டில் அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் மத்திய அரசு ஒப்புதலுடன் தொழில் முனைவோருக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் ஒதுக்கீடு செய்யப்படும். கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு தானாக முன்வந்து ஒப்புதல் அளித்துள்ளது. எங்களது அரசு, தொழில் முனைவோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. கடந்த ஆட்சியில் கொடுக்கப்படாமல் இருந்த நிலுவைத் தொகை ரூ.45 கோடியை தொழில் முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. எளிதாக தொழில் தொடங்கும் திட்டத்திற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. வரும் 18ம் தேதி சட்டசபை கூடுகிறது. அப்போது இந்த சட்ட மசோதா ஒப்புதல் பெறப்பட்டு அது அரசாணையாக வெளியிடப்படும். இதன் மூலம் தொழில் முதலிட்டாளர்கள் எளிதாக தொழிலை தொடங்க முடியும். கடந்த கால தொழில் கொள்கை , சட்டங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.