சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டம், நாளை தரிசனம்
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்றும், நாளை தரிசனமும் நடக்கிறது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்து வருகிறது.முக்கிய உற்சவமான தேரோட்டம் இன்று (12ம் தேதி) நடைபெற உள்ளது. சித்சபையில் இருந்து, நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் இன்று காலை 7:00 மணிக்கு தேரில் எழுந்தருள தேரோட்டம் காலை 7:00 மணிக்கு துவங்குகிறது. தேரோட்டம் முடிந்து, இரவு தேரில் இருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் எழுந்தருள்வர்.நாளை (13ம் தேதி) அதிகாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடக்கிறது. பின்னர் சொர்ணாபிஷேகம், சித்சபையில் ரகசிய பூஜை நடைபெறும். மதியம் 2:00 மணிக்கு மேல் 3:00 மணிக்குள் பக்தர்கள் கரகோஷம் முழங்க, ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் நடனம் ஆடியபடியே பக்தர்களுக்கு காட்சி தரும், ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. 14ம் தேதி முத்துப்பல்லக்கு, 15ம் தேதி இரவு, சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளத்தில், தெப்பல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.