டெங்கு பரவலை தடுக்க அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு
புதுச்சேரி: புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ரங்கசாமி, அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். புதுச்சேரி, வணிகவரித்துறை கருத்தரங்க கூடத்தில், நேற்று முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், 'டெங்கு' காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, முதல்வரிடம், அதிகாரிகள் விளக்கினர்.முதல்வரிடம் அதிகாரிகள் கூறியதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை பொருத்தவரை, 70 ஆயிரம் வீடுகளுக்கு கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரியில், 45 ஆயிரம்; காரைக்காலில், 15 ஆயிரம், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் தலா, 5 ஆயிரம் வீடுகளுக்கு கொசு மருந்து தெளிக்கப்பட உள்ளன.இது தவிர கண்காணிப்பு மருத்துவமனைகளிலும் போதிய மருந்து, ரத்தம் மற்றும் கொசு வலைகளுடன் டெங்கு வார்டு உள்ளது. அனைத்து கண்காணிப்பு மருத்துவமனைகளிலும் போதுமான எண்ணிக்கையிலான என்.எஸ்.1 சோதனைக் கருவிகள் இருப்பில் உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைத்து நகர மற்றும் கிராமப் பகுதிகளில், தூய்மை மற்றும் மருந்து தெளிக்கும் பணியை தீவிரப்படுத்த முதல்வர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும் அவர் கொசு மருந்து மற்றும் புகை தெளித்தல் பணிகளை உள்ளாட்சித் துறை மற்றும் சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும், மழைக்காலம் வர உள்ளதால் அதற்கு முன்பாகவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வலியுறுத்தினார். இதில் அரசு செயலர் ராஜூ, கலெக்டர் குலோத்துங்கன், சுகாதாரத்துறை பொறுப்பு இயக்குநர் செவ்வேள், விஞ்ஞானி ஸ்ரீராம், சுகாதாரத்துறை சார்புச செயலர் முருகேசன், நகராட்சி ஆணையர்கள், கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஆணையர்கள், பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.