வருத்தத்தில் முதல்வர் ரங்கசாமி: போட்டுடைத்தார் நமச்சிவாயம்
புதுச்சேரி : என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி தமரை இலை தண்ணீர் போல் ஒட்டாமல் இருப்பதை, அமைச்சர் நமச்சிவாயம் பேச்சில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும், கூட்டணிக்குள் அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வருகிறது. கவர்னர், அதிகாரிகள் ஒத்துழைப்பில்லை என முதல்வர் ரங்கசாமி பொதுவெளியிலேயே புலம்பி வந்தார். இந்த உரசல், கடந்த ஜூலை மாதம் சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தில் பூதாகரமாக வெடித்தது. அதிருப்தி அடைந்த முதல்வர் ரங்கசாமி, ஒரு அதிகாரியை கூட நியமிக்க முடியாத முதல்வர் பதவி எதுக்கு, ராஜினாமா செய்துவிட்டு போகிறேன் எனக் கூறி மூன்று நாள் சட்டசபைக்கு செல்லாமல் இருந்தார்.அதனைத் தொடர்ந்து ஜூலை 10ம் தேதி பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, ரங்கசாமியின் வீட்டிற்கு சென்று சமாதானப்படுத்தினார். முதல்வர் ரங்கசாமி சமாதானமடைந்ததால், பா.ஜ.,வினர் உற்சாகமடைந்தனர். ஆனாலும் என்.ஆர்.காங்., மத்தியில் புகைச்சல் இருந்து கொண்டுதான் உள்ளது. இதன் காரணமாகவே, டில்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா செய்த ஏற்பாட்டை, முதல்வர் ரங்கசாமி தனக்கே உரிய பணியில் தட்டிக்கழித்து வந்தார். இந்நிலையில் நேற்று பா.ஜ., சார்பில் தனியார் ஓட்டலில் நடந்த சிந்தனை அமர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், புதுச்சேரியில் பா.ஜ., வளர்ந்துள்ளது. வலுவாக உள்ளது. நாம் ஒற்றுமையுடன் பணியாற்றினால் தேர்தலில் வெற்றி பெறலாம். கூட்டணியை பொருத்தவரை நமக்கு திருப்தி. ஆனால், அவர் (முதல்வருக்கு) இன்னமும் வருத்தத்தில் உள்ளார். இதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். நமச்சிவாயத்தின் இந்த பேச்சு, என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி, தமரை இல்லை தண்ணீர் போல் ஒட்டாமல் இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.