புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த சர்வதேச யோகா திருவிழாவில் சாம்பியன் பட்டம் வென்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரதீபா, ஆவடியை சேர்ந்த நவநீத கணபதிக்கு முதல்வர் ரங்கசாமி பரிசுகள் வழங்கினார்.புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை சார்பில், 29வது சர்வதேச யோகா திருவிழா, கடற்கரை சாலை, காந்தி திடலில், கடந்த 4ம் தேதி துவங்கியது. இந்த விழாவில், யோகாசன போட்டிகள், செயல்விளக்கம், பயிற்சிப்பட்டறை, ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, ஹரியானா, சண்டிகர், குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் மற்றும் அமெரிக்காவில் இருந்தும், 1,287 பேர் கலந்துகொண்டனர். போட்டியில் சிறப்பு ஏற்பாடாக ஆன்லைன் மூலம் பங்கேற்பாளர்கள் பதிவு செய்யப்பட்டு யோகாசனப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களின் மதிப்பெண்கள் உடனுக்குடன் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 5 மற்றும் 6ம் தேதி காமராஜர் மணிமண்டபத்தில், பல்வேறு வயதினருக்கான யோகாசனப் போட்டிகள் நடந்தன. அதில் யோகாசன செயல்விளக்கம், பயிற்சிப்பட்டறை மற்றும் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன. இதுஒருபுறம் இருக்க, சித்தா, ஆயூர்வேதா, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட நலவாழ்வு கண்காட்சி காந்தி திடலில் உள்ள கைவினை அங்காடியில் நடைபெற்றது. இதனிடையே யோகாசனப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு இடையேயான சாம்பியன் பட்டம் வெல்வதற்கான போட்டிகள், நேற்று காலை 10:00 மணிக்கு காந்தி திடலில், நடந்தது. இந்தாண்டில் யோகாசனப் போட்டிகளில், 27 பேர் முதல் பரிசும், 31 பேர் இரண்டாம் பரிசும், 41 பேர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.இதில், பெண்கள் பிரிவில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரதீபா; ஆண்கள் பிரிவில், சென்னை ஆவடியை சேர்ந்த, நவநீத கணபதி சாம்பியன் பட்டம் வென்றனர். நிறைவு விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது;யோகா கலையை மாணவர்கள் கற்று கொள்ள வேண்டும். நமக்கு மிக பெரிய ஆசை எது என்றால் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது தான். அதற்கு யோகா கலையை நாம் கற்று கொள்ள வேண்டும். உடற்பயிற்சியோடு யோகாவை சேர்ந்து கற்று கொண்டால், நல்ல முறையில் நாம் சுவாசிக்க முடியும். மனசும், உடலும் ஒத்து வந்தால் தான் யோகா கலையை கற்க முடியும். விழாவில், மாணவர்கள் அதிகம் பேர் பரிசுகள் பெற்றுள்ளனர். அதற்கு காரணம் யோகா கலையில் அவர்கள் அதிக ஈடுபாட்டுடன் உள்ளதை காட்டுகிறது. புதுச்சேரியில் சுற்றுலாத்துறைக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது' என்றார்.விழாவில், சபாநாயகர் செல்வம், சுற்றுலா அமைச்சர் லட்சுமிநாராயணன், ஜான்குமார் எம்.எல்.ஏ., அரசு செயலர் மணிகண்டன், துறை இயக்குநர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.