ஆசிய பூப்பந்து போட்டியில் வெண்கலம் வென்ற மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
காரைக்கால்: ஆசிய அளவிலான பூப் பந்துபோட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காரைக்கால் மாணவியை அமைச்சர் மற்றும் கலெக்டர் பராட்டினர். காரைக்கால், அக்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்; மீன் பிடித்தொழிலாளி. இவரது மனைவி கீதாமணி. இவர்களின் மகள் ஜனனிகா, 17; எஸ்.ஆர்.வி.எஸ்., உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இவர், தென்னிந்திய அளவில் கோயம் பத்துார் மற்றும் ஆந்திராவில் நடந்த பூப்பந்து போட்டிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தார். தொடர்ந்து தென் மண்டல அளவிலும், ஹைதராபாத் மற்றும் பஞ்ச்குலா மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான பூப் பந்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து, சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான பூ பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்றார். அதில், வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவி ஜனனிகா நேற்று காரைக்கால் வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைச்சர் திருமுருகன் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், அவரை மேள, தளங்களுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் அழைத்து சென்றனர். கலெக்டர் ரவிபிரகாஷ், மாணவிக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் துணை கலெக்டர் பூஜா, சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, தாசில்தார் செல்லமுத்து, பள்ளி முதல்வர் சித்ரா கிருஷ்ணன், மேல்நிலைக்கல்வி துணை இயக்குநர் ஜெயா உடனிருந்தனர். மாணவி ஜனனிகா கூறுகையி ல், 'ஆசிய அளவிலான பூப் பந்து போட்டியில் வெற்றிப்பெற்றது பெருமையாக உள்ளது. எனது வெற்றிக்கு காரணமான பயிற்சியாளர் தட்சிணாமூர்த்தி, பெற்றோர் அனைவருக்கும் நன்றி' என்றார்.