கடன் தொல்லையால் கம்பெனி ஊழியர் தீக்குளிப்பு
புதுச்சேரி: கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜா கணேஷ் 40, இவர் குடும்பத்துடன் புதுச்சேரி கரசூரில் வீடு வாடகை எடுத்து அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் உறவினர் உள்ளிட்ட பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டனர்.இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ராஜா கணேஷ் நேற்று முன்தினம் காலை அவரது பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீவைத்து கொண்டார். உறவினர்கள் தீயை அணைத்து, அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து சேதாரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.