மணக்குள விநாயகர் சட்ட கல்லுாரியில் இந்திய அரசியலமைப்பு தின விழா
புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் சட்டக் கல்லுாரியில், இந்திய அரசியலமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்வி அறக்கட்டளை பொருளாளர் ராஜராஜன், துணைச் செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். பொறியியல் கல்லுாரி முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட் நீதிபதி ஷமீம் அகமது பங்கேற்று பேசுகையில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் அடிப்படை ஆவணம் மட்டுமல்லாது, ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளை பாதுகாக்கும் கேடயம். எதிர்கால வழக்கறிஞர்களாகவும் நீதித் துறையின் துாண்களாகவும் உருவாகும் சட்டக் கல்லுாரி மாணவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களையும் கோட்பாடுகளையும் ஆழமாக கற்றுணர வேண்டும். சட்ட விழிப்புணர்வை அடித்தட்டு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இளைய தலைமுறையினருக்கு உண்டு’ என்றார். தமிழக அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன் வாழ்த்தி பேசினார். மாணவர்களிடையே அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பேச்சு, கட்டுரை, போஸ்டர் உருவாக்கும் போட்டி, குறும்படம் ரீல்ஸ் உருவாக்கும் போட்டி மற்றும் அரசியலமைப்பு முகப்புரை ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு நீதிபதி ஷமீம் அகமது சான்றிதழ்களை வழங்கினார். டீன் வின்சென்ட் அற்புதம் நன்றி கூறினார்.