பிராமண சமூகத்திற்கான தகன கொட்டகை அர்ப்பணிப்பு
புதுச்சேரி : கருவடிக்குப்பம் மயானத்தில் புதுப்பிக்கப்பட்ட பிராமண சமூகத்திற்கான தகனக் கொட்டகை அர்ப்பணிக்கப்பட்டது. கருவடிகுப்பம் மயானத்தில் நுாற்றாண்டை கடந்த பிராமண சமூகத்திற்கான தகனக் கொட்டகை சிதிலமடைந்து இருந்தது. மேற்கூரை இல்லாததால், மழைக்காலங்களில் இறுதிச் சடங்குகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், பாரதப் பண்பாட்டு அமைப்பான வேதபாரதி, உழவர்கரை நகராட்சியின் அனுமதியுடன் சிதிலமடைந்த தகன கொட்டகையை அகற்றிவிட்டு, மிகத் தொன்மையுடன் கருங்கல்லினால் துாண்கள் அமைத்து நுாற்றாண்டுகள் கடந்து நிற்கும் வகையில் நேர்த்தியாக புதிய தகன கொட்டகையை அமைத்துள்ளது, அதனை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தகன கொட்டகை, புதுச்சேரி 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் முன்னிலையில் அர்ப்பணிக்கப்பட்டது. இப்பணியை வேதபாரதியின் தலைவர் பட்டாபிராமன், பொதுச் செயலாளர் நடராஜன், பொருளாளர் ரவிச்சந்திரன், ஆலோசகர் சந்திரசேகரன், கணேஷ், வெங்கடேசன், வேதராமன், ரமேஷ் ஆகியோர் முன்னின்று செய்திருந்தனர். இக்கட்டுமானத்தை, ஆசீர்வாத் அசோசியேட்ஸ் சி.இ.ஓ., ரமேஷ் உருவாக்கியுள்ளார்.