தரமற்ற மருந்து கொள்முதல் விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை
புதுச்சேரி: தரமற்ற மருந்து கொள்முதல் விஷயத்தில் கவர்னர் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். அவர், கூறியதாவது: தி.மு.க., காங்., கூட்டணி ஆட்சியில் தரமற்ற மருந்து கொள்முதல் செய்தது மற்றும் மதுபான உற்பத்தியில் லஞ்சம் பெற்றது உட்பட பல விஷயங்களில் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், அப்போதைய காங்., அமைச்சர் ஒருவரும் ஊழல் சம்பந்தமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். முன்னாள் காங்., அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மற்றும் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் குற்றச்சாட்டுகள் மீது கவர்னர் விசாரணை கமிஷன் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அவர்கள் இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை. இலங்கை நீதிமன்றம் அவர்களது நீதிமன்ற காவலை மீண்டும் நீட்டித்துள்ளது. மீனவர்கள் விடுதலை விஷயத்தில் புதுச்சேரி அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களை ஜாமினில் எடுக்க அதிகாரியை இலங்கைக்கு அனுப்பி, உரிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்' என்றார். பேட்டியின்போது, மாநில இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, துணைச்செயலாளர் நாகமணி, மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி உடனிருந்தனர்.