| ADDED : ஜன 10, 2024 01:08 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே மேல்மருவத்துார் சென்ற வேன் கிடு கிடு பள்ளத்தில் உருண்டதால், லேசான காயத்துடன் பக்தர்கள் உயிர் தப்பினர்.தஞ்சாவூர் மாவட்டம், வலங்கைமானிலிருந்து பெண்கள், ஆண்கள் என 18 பேர், நேற்று காலை மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல மகேந்திரா வேனில் புறப்பட்டனர். பகல் 12:.20 மணிக்கு கடலுார் மாவட்டம் சேத்தியாத்தோப்பு-வடலுார் சாலையில், சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கிய வேன் களிமண்ணில் சிக்கி, 15 அடி பள்ளத்தில் உருண்டது.இடிபாடில் சிக்கிய பக்தர்களை, போலீசார் மற்றும் அவ்வழியே சென்றவர்கள் வேன் கண்ணாடிகளை உடைத்து மீட்டனர். காயமடைந்த 5 பகதர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்பே எச்சரித்தது 'தினமலர்' நாளிதழ்
சென்னை-கும்பகோணம் சாலையில், புதிய தார்சாலை அமைத்தபோது ஓரத்தில் களிமண் அணைக்கப்பட்டது. இதனால், வாகனங்கள் வழுக்கி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் என, 'தினமலர்' நாளிதழ் முன்பே எச்சரித்தது.ஆனால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாததால், தற்போது, களிமண்ணில் சிக்கிய வேன் கவிழந்து விபத்திற்குள்ளாகி உள்ளது. இனியும் விபத்து தொடராமல் இருக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.