உறுதி மொழி குழு தலைவர் பதவி நீக்கம் வரம்பு மீறிய செயல்: மா.கம்யூ., குற்றச்சாட்டு
புதுச்சேரி: தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக, உறுதிமொழி குழுவின் தலைவர் பதவி நீக்கப்பட்டு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது வரம்பு மீறிய செயல் என, மா.கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி முதல்வர் அறையில் சபாநாயகருக்கும், நேரு எம்.எல்.ஏ.,விற்கும் இடையே நடந்த வாக்குவாதம் காரணமாக சட்டசபை உறுதிமொழி குழு தலைவர் பதவியில் இருந்து, நேரு எம்.எல்.ஏ., நீக்கம் செய்யப்பட்டுள்ளது சட்டசபை அலுவலக விதிக்கு எதிரானது. சபாநாயகர் செல்வம் வானளாவிய அதிகாரம் படைத்தவராக நடந்து கொள்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல. தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக, உறுதிமொழி குழுவின் தலைவர் நீக்கப்பட்டு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது வரம்பு மீறிய செயல். மாநில முதல்வர் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. பா.ஜ., கூட்டணி ஆட்சியில் எதுவும் நடக்கும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சட்டசபையில் அமைச்சர்கள், சபைத் தலைவர், எம்.எல்.ஏ.,க்களுக்கான அதிகார வரம்பை ஒழுங்கு படுத்த முதல்வர் உரிய தலையீடு செய்ய வேண்டும்.சபாநாயகர் தான் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். சட்டசபை அலுவலக விதிக்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுதிமொழி குழு தலைவர் பதவி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.