பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலம்
புதுச்சேரி: பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள், உடனே வேலை வழங்குவதற்கான அரசாணை வெளியிடக்கோரி நேற்று சட்டசபை நோக்கி ஊர்வலம் சென்றனர்.புதுச்சேரி, பொதுப்பணித்துறையில் 2016ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், தேர்தல்துறை மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.இதையடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஒருங்கிணைந்து மீண்டும் பணி வழங்கக்கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அரசு உடனே வேலை வழங்க வலியுறுத்தி நேற்று சட்டசபை நோக்கி ஊர்வலம் சென்றனர். ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் ஊழியர்கள் ஊர்வலமாக அண்ணா சிலை, நேரு வீதி, மிஷன் வீதி, ஜென்மராக்கினி கோவில் வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தனர்.அங்கு, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பண்டிகை காலங்களில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்ததால், வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.