அமைச்சரின் சகோதரியுடன் தகராறு; பா.ஜ., பிரமுகர் தந்தையுடன் கைது
புதுச்சேரி; இடப்பிரச்னையில் அமைச்சரின் சகோதரியுடன் தகராறு செய்த பா.ஜ., பிரமுகர் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி ஈஸ்வரி. புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமாரின் சகோதரி. ஈஸ்வரிக்கு அதே பகுதியில் 800 சதுரடி காலிமனை உள்ளது. இந்த இடத்தை வெகுநாட்களாக பராமரித்து வந்த பா.ஜ., பிரமுகர் உமாசங்கர் மற்றும் அவரது தந்தை காசிலிங்கம் ஆகியோர் தங்களுக்கு தான் சொந்தம் என கூறி தகராறு செய்தனர். இந்த இடத்திற்குள் யாரையும் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி செந்தில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.செந்தில்குமார் புகாரின்பேரில், லாஸ்பேட்டை போலீசார், தாசில்தார் மற்றும் வருவாய் துறை மூலம் இடத்தை அளவீடு செய்து விசாரித்தனர். அதில், அந்த இடம் செந்தில்குமாருக்கு சொந்தமானது என, தெரியவந்தது.இதையடுத்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து உமாசங்கர், காசிலிங்கத்தை கைது செய்தனர்.