போக்குவரத்திற்கு இடையூறாக பயணிகளை ஏற்றி இறக்க கூடாது: டெம்போ டிரைவர்களுக்கு சீனியர் எஸ்.பி. எச்சரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்திற்கு இடையூறாக பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என டெம்போ டிரைவர்களுக்கு போக்குவரத்து சீனியர் எஸ்.பி. திவ்யா அறிவுறுத்தினார். புதுச்சேரி நகர பகுதியில் இயக்கப்படும் டெம்போக்கள் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, போக்குவரத்து போலீசார், டெம்போ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் உருளையன்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, சீனியர் எஸ்.பி., திவ்யா தலைமை தாங்கினார். எஸ்.பி. ரச்சனா சிங், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாஜலபதி, வேலையன், கார்த்திகேயன் உள்ளிட்ட டெம்போ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சீனியர் எஸ்.பி. திவ்யா பேசுகையில், கடந்த 40 முதல் 50 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து, வீட்டிற்கு வீடு வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால், சாலைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் அப்படியே உள்ளன. அனைவரும் அவசரத் தேவைகளுக்காகச் செல்ல வேண்டிய சூழலில், இடவசதி குறைவாக இருப்பதால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். டெம்போக்கள் சிக்னல் மற்றும் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி, பயணிகளை இறக்கி, ஏற்ற கூடாது. ஆனால், யாரும் கேட்பதாக தெரியவில்லை. அன்பாகச் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டும். உங்கள் வாகனங்களைப் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி, அலைய விடுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. வேறு வழியில்லாமல்தான் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என பேசினார்.