உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10 சதவீத இடஒதுக்கீடு கோரி மீனவர்கள் உண்ணாவிரதம்

10 சதவீத இடஒதுக்கீடு கோரி மீனவர்கள் உண்ணாவிரதம்

புதுச்சேரி: மீனவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி அரசு, கடந்த 2010ம் ஆண்டு முதல் மீனவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் எம்.பி.சி.,களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 2 சதவீதம் உள் ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் மீனவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிகரித்து வழங்க வேண்டும் என புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மீனவ அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நேற்று சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்,பி, எம்.எல்.ஏ., க்கள் நேரு, வைத்தியநாதன், மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பேசினர். அப்போது, மாநில மக்கள் தொகையில் 1.70 லட்சம் பேர் மீனவர்கள் உள்ளனர். விகிதாச்சார அடிப்படையில் மீனவர்களுக்கு குறைந்தபட்ச 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உண்ணாவிரத போராட்டத்தை வீராம்பட்டினம், வம்பாகீரைப்பாளைம் பஞ்சாயத்தார் முடித்து வைத்தனர். போராட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கனகசபை, செல்வநாதன், தேவநாதன், நித்தியானந்தம், தேவசேனாதிபதி, பாலு, இலக்கியா அருந்ததி, ராஜ், புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ