அனுமதியின்றி கொடி கம்பங்கள் நாளைக்குள் அகற்ற கெடு
புதுச்சேரி : பொது இடங்களில் வைத்துள்ள கொடி கம்பங்கள் மற்றும் பேனர்களை நாளை 1ம் தேதிக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும் என, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜன் எச்சரித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்படி, புதுச்சேரியில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் அனுமதியின்றி வைத்துள்ள பேனர்கள், கட் அவுட் மற்றும் கொடிக்கம்பங்களை வரும் 2ம் தேதிக்குள் அகற்றிட புதுச்சேரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அதனடிப்படையில், உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட உட்புற சாலைகளில் ஆய்வு செய்ததில் 33 இடங்களில் அரசியல் கட்சிகள், சமூகம், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற கொடிகம்பங்கள் அனுமதியின்றி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.இந்த கொடி கம்பங்கள் மற்றும் பேனர்களை சம்மந்தப்பட்டவர்களே நாளை 1ம் தேதிக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் உழவர்கரை நகராட்சி, வருவாய் துறை மற்றும் போலீசார் இணைந்து அகற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.