உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மலர், காய், கனி கண்காட்சி பிப்., 7ம் தேதி. துவங்குகிறது: 50,000 மலர் செடிகள் காட்சிக்கு வைக்க ஏற்பாடு

மலர், காய், கனி கண்காட்சி பிப்., 7ம் தேதி. துவங்குகிறது: 50,000 மலர் செடிகள் காட்சிக்கு வைக்க ஏற்பாடு

புதுச்சேரி: புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் 35வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சிவரும் 7ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகளைவேளாண் துறை செய்து வருகிறது.புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் வேளாண் விழா மற்றும் மலர், காய் மற்றும் கனிக் கண்காட்சி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.அதில், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகள், விதைகள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு முறைகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், புதிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில் நுட்பங்களை அரங்கங்களில் காட்சிப்படுத்தி வருகின்றன.அதன்படி, இந்தாண்டிற்கான 'வேளாண் விழா மற்றும் 35வது மலர், காய் மற்றும் கனிக் கண்காட்சி வரும் பிப்., 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த கண்காட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் காட்சிக்கும் வைக்கப்பட உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் மட்டுமின்றி விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் தோட்டக்கலை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து தங்களின் படைப்புகள் மற்றும் செயல்பாடுகளை காட்சிப்படுத்த உள்ளனர்.

பரிசு மழை

வேளாண் விழாவில், கொய் மலர்கள், தொட்டி வளர்ப்பு, மலர் அலங்காரம், காய்கறிகள், பழ வகைகள், தென்னை, மூலிகைச் செடிகள், பழத்தோட்டங்கள், காய்கறி சாகுபடி வயல்கள், அலங்காரத் தோட்டம், மாடி தோட்டம், வீட்டுக் காய்கறித் தோட்டம் மற்றும் ரங்கோலி ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுப்பவர்களுக்கு 'மலர் ராஜா', 'மலர் ராணி' பட்டம் வழங்கப்படும். மேலும், இந்தாண்டு பள்ளி மாணவர்கள் மட்டும் பங்குபெறும் ரங்கோலி, வினாடி வினா மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடக்கிறது. கண்காட்சியில் பங்கு பெறும் விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விவசாயக் கருத்தரங்குகள் மற்றும் உயர்ரக நடவுக் கன்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுடன், தனியார் நிறுவனங்களின் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள் செயல்பட உள்ளது.மலர் கண்காட்சி துவங்குவதையொட்டி, தாவரவியல் பூங்காவில் ஆயத்த ஏற்பாடுகளை வேளாண் துறை முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை