நிர்வாக சீர்கேட்டால் தள்ளாடும் தடய அறிவியல் ஆய்வகம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, கடந்த 2013ம் ஆண்டு ரூ.3.65 கோடி செலவில், புதுச்சேரியில் தடய அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டது. தடய அறிவியல் மேம்பாட்டு வாரியத்தின் கீழ், கிருமாம்பாக்கம் போலீஸ் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்த ஆய்வகத்தில், உயிரியல், மரபணு, சைபர் பாரன்சிக், ஆவணம், நஞ்சுயியல், போதை பொருட்கள், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போக்சோ, திருட்டு, விபத்து போன்ற குற்ற சம்பவங்களில் போலீசாரால் சேகரிக்கப்படும் தடயங்களை ஆய்வு செய்து அறிக்கை வழங்கும் பணியை செய்து வருகிறது. இந்நிலையில், தடய அறிவியல் ஆய்வகத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. ஆய்வறிக்கை முடிவுகள் விரைந்து அளிக்கப்படாத நிலையில், போலீசார் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட நபர்களும், தடய அறிவியல் ஆய்வகத்திற்கு நடையாய் நடந்து வருகின்றனர்.குறிப்பாக, கிருமாம்பாக்கம் பகுதியில் கடந்த ஆண்டு மர்மமான முறையில் கால்நடைகளும், குளத்தில் வளர்க்கப்பட்ட மீன்களும் இறந்தன. இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து, மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி, ஓராண்டை கடந்த போதிலும், ஆய்வு முடிவுகள் கிடைக்காததால், இழப்பீடு பெற முடியவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இங்குள்ள அனைத்து பணியிடங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியிலும் வெளி மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், புதுச்சேரி இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஓரிரு நாட்களில் கிடைக்க வேண்டிய ஆய்வு முடிவுகள், நிர்வாக சீர்கேடு காரணமாக, ஆண்டு கணக்கில் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. தடய அறிவியல் மேம்பாட்டு வாரிய குழு இங்கு ஆய்வு மேற்கொண்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. நிர்வாக சீர்கேடுகளால் தள்ளாடி வரும் தடய அறிவியல் ஆய்வகத்தின் மீது, புதுச்சேரி உள்துறை அமைச்சகம் கவனம் செலுத்திட வேண்டும்.