பாதுகாப்பு இல்லாத குடிநீர் விநியோகம் மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி,: புதுச்சேரியில்பாதுகாப்பு இல்லாத குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை: டில்லியில் நடந்த சுதந்திர தினவிழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, வீர சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்று அவருடைய பெயரை நினைவுகூர்ந்து பேசினார்.வீர சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்தின் போது, சிறையில் அடைக்கப்பட்ட போது, மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தார். மோடியும், பா.ஜ.,வும் இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றியமைக்க நினைக்கிறது.அது ஒருபோதும் நடக்காது. தமிழகத்தில் தொடர்ந்து புலனாய்வுத் துறை, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை தி.மு.க., தலைவர்களையும், அமைச்சர்களையும் குறிவைத்து அவர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வேலையை செய்து வருகிறது. புதுச்சேரியில் தொடர்ந்து ஊழல் குற்றச் சாட்டுகளை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்களின் மீது ஆதாரத்தோடு கொடுத்தாலும் அமலாக்க பிரிவு, சி.பி.ஐ., வேடிக்கை பார்க்கிறது. இவைகள் எல்லாம் பா.ஜ.,வின் அடிமைகளாக செயல்படுகின்றன. புதுச்சேரியில் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பு இங்கு இல்லை. சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்த 3 பேர் சின்ன வீராம்பட்டினம் கடலில் குளித்த போது, தண்ணீரில் மூழ்கி இறந்தனர். அவர்களின் இறப்பிற்கு, சுற்றுலாத்துறையும், அதன் அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும். புதுச்சேரியில் குடிநீர் பாதுகாப்பு இல்லாத நிலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. குடிநீர்திட்டத்திற்காக மத்திய அரசிடம்இருந்து மானியம் பெறும் அரசு,அந்த பணத்தை முறையாக செலவு செய்யாமலும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமலும் பாதுகாப்பற்ற குடிநீர் மக்களுக்கு கொடுப்பது பெரிய குற்றமாகும். உடனடியாக பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு நகர மற்றும் கிராம பகுதிகளில் பாதுகாப்பான குடிநீரை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.