தமிழில் பெயர் பலகை அறிவிப்பை செயல்படுத்த முன்னாள் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
புதுச்சேரி : தமிழில் பெயர் பலகை அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். அதை பல மாதங்கள் ஆகியும் அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. பல இடங்களில் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.அதிகாரிகள் உடனடியாக தமிழ் இல்லாத பெயர் பலகைக்கு அபராதம் விதிக்க வேண்டும். புதுச்சேரியில் வணிக நிறுவனங்கள் பள்ளிகள், கல்லுாரிகள் அரசு நிறுவனங்கள் அனைத்திலும் தமிழ் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை. உடனடியாக சட்டசபையில் கூறியதை பெயரளவில் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். புதுச்சேரி நகராட்சி மற்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர்கள் தமிழ் மொழியில் பெயர் பலகை இல்லையென்றால் அந்தந்த நிறுவனங்களுக்கு கூடுதலாக வரி விதிக்க வேண்டும். தமிழ் வளர்க்க வேண்டும் என்றால் ஒத்த கருத்துடைய வகையில் வேலை செய்ய வேண்டும்.மத்தியில் எந்த அரசாங்கம் இருந்தாலும் புதுச்சேரியில் ஹிந்தி ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ் கலாசாரத்தை வளர்க்க அரசியல் அல்லாமல் பாடுபட வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.