7 பேரிடம் ரூ.3.95 லட்சம் மோசடி
புதுச்சேரி: குரும்பாம்பேட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஓஎல்எக்ஸ் தளத்தில் லேப்டாப் உதிரிபாகங்கள் ஆர்டர் செய்துள்ளார். அவரை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் வங்கி கணக்கில் ரூ.17 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் கூறியபடி உதிரிபாகங்கள் வரவில்லை. இது குறித்த புகாரை, சைபர் கிரைம் போலீசார், மேட்டுபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர். அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவர் பழக்கமானார். அவர் அவசர தேவை என கூறி ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார். அது போலி இன்ஸ்டாகிராம் கணக்கு என தெரியவந்தது. இது குறித்த புகாரை சைபர் கிரைம் போலீசார், அரியாங்குப்பம் போலீசார் அனுப்பி வைத்தனர். முத்தியால்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர் பேஸ்புக்கில் ட்ரோன் உதிரிபாகங்கள் கிடைப்பதாக விளம்பரம் வந்ததை பார்த்தார். அந்த லிங்கை கிளிக் செய்ததும், அவரின் ஜிபே வேலை செய்யவில்லை. அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரம் எடுக்கப்பட்டது. இது குறித்த புகார் முத்தியால்பேட்டை போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரி நகரப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக்கில் ரூ. 30 கோடி மதிப்புள்ள வெள்ளியை ரூ.30 ஆயிரத்திற்கு தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். அதை நம்பி, அவர், விளம்பரம் வந்த லிங்கிற்கு ரூ.11 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். இது குறித்த புகார், பெரியகடை போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலியார்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைனில் ரூ.498க்கு துணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், துணி வரவில்லை. இது குறித்து அவரது புகார், முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லாஸ்பேட்டையை சேர்ந்த நபரை ஆன்லைன் அப்ளிகேஷன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் குறைந்த வட்டியில் ரூ. 5 லட்சம் லோன் தருவதாக கூறியுள்ளனர். அதற்கு செயலாக்க கட்டணமாக ரூ.79 ஆயிரத்து 400 பெற்று மோசடி செய்துள்ளனர். இது குறித்த புகார், லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முத்தியால்பேட்டையை சேர்ந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர்கள் ரூ. 1 லட்சத்து, 86 ஆயிரத்து 488 பணத்தை எடுத்துள்ளனர். இது குறித்து அவர் அளித்த புகார், முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.