குப்பை வரி சதுர மீட்டரா... சதுர அடியிலாநான்கு ஆண்டாக தொடரும் குழப்பம்
புதுச்சேரியில் கடந்த 2017-18 ம் ஆண்டு முதல் குப்பை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. அப்போது குப்பை வரி சதுர மீட்டரில் கணக்கிட்டு அமலுக்கு கொண்டு வந்தபோது, அதிகப்படியான வரி விதிப்பிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடன், அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர், வரி விதிப்பை குறைப்பதாக கூறி, நடைமுறையிலிருக்கும் சதுர மீட்டருக்கு, பதிலாக சதுர அடியில் வசூலிக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார்.அதனையேற்று உள்ளாட்சித்துறை அதிகாரிகளும் குப்பை வரியை கடந்த 2019-20ம் நிதி ஆண்டு முதல் சதுர அடி கணக்கில் அமலுக்கு கொண்டு வந்தனர்.சதுரமீட்டரில் இருக்கும் வரியை, சதுர அடியில் கணக்கிடும் பொழுது வரி அதிகமாவதை கவனத்தில் கொள்ளாமல், அரசு அறிவித்தது இமாலய தவறு என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பாக கவர்னர் மாளிகை கதவை தொடர்ந்து தட்டி வரும் ஓய்வு பெற்ற அதிகாரி தாமோதரன் கூறியதாவது: உள்ளாட்சி துறை அமைச்சர் சட்டசபையில் குப்பை வரி குறைப்பதற்கான அறிவிப்பில் கவனக்குறைவு ஏற்பட்டது. அதனை அதிகாரிகள் சரி செய்யாமல், குப்பை வரியை கணக்கீடு செய்தது தவறு.அதாவது புழக்கத்தில் உள்ள அதிகப்படியான வரியை குறைப்பதற்கு பதிலாக, மேலும் அதிகப்படியாக உயர்த்திவிட்டனர். இது அப்பட்டமான அலட்சியபோக்கு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணங்களுக்கு மாறாக செயல்பட்ட அரசு அதிகாரிகளின் மெத்தனத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். பொதுமக்களின் இடையூறுகளை உள்ளாட்சி துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. இதனை கடந்த நான்காண்டாக கவர்னர் முதல் அதிகாரிகள் வரை, பல கடிதங்கள் மூலம் கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இல்லாமல். அதிகாரிகள், செய்த குளறுபடியை நிவர்த்தி செய்ய தயங்குகின்றனர்.தற்சமயம் கடைபிடிக்கப்படும் தவறான குப்பை வரி விதிப்பு வழிகாட்டுதல் நெறிமுறையை அரசு உடனடியாக முறைப்படுத்த வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்களுக்கு வழி வகுக்கும் என்றார்.