எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு அரசுக்கு கூடுதல் இடங்கள்... ஒதுக்கீடு; நான்கு கல்லுாரிகளில் 386 சீட்டுகளை நிரப்ப முடிவு
புதுச்சேரி: அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இந்தாண்டு 386 எம்.பி.பி.எஸ்., இடங்கள்அரசு ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்ப இறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் 3 தனியார் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக முதல்வர் ரங்கசாமி தலைமையில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, முதல்வர் ரங்கசாமி, மருத்துவ படிப்பில் கூடுதலாக அரசு ஒதுக்கீட்டு இடங்களை தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக கல்லுாரி நிர்வாகங்களிடம் கலந்தோசித்து முடிவினை சொல்வதாக தெரிவித்து இருந்தனர்.இதற்கிடையில் எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்களை இறுதி செய்வதற்கான கூட்டம் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் சுகாதார துறை சார்பு செயலர் சவுமியா, இயக்குநர் செவ்வேள், சிறப்பு பணி அதிகாரி ஜோசப்பின் சித்ரா, தனியார் மருத்துவ கல்லுாரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நீண்ட விவாதத்திற்கு பின் கூடுதலாக எம்.பி.பி.எஸ்., சீட்டுகளை தர தனியார் மருத்துவ கல்லுாரிகள் முன் வந்தன. பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா உள்ளிட்ட மூன்று தனியார் கல்லுாரிகளும் கடந்தாண்டு 240 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக வழங்கின. இந்தாண்டு மூன்று மருத்துவ கல்லுாரிகளும் இணைந்து 255 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளை தர முன் வந்துள்ளன. கூடுதலாக இந்தாண்டு 15 சீட்டுகள் கிடைத்துள்ளன. பிம்ஸ் மருத்துவமனை கடந்தாண்டு 57 சீட்டுகளை வழங்கியது. கடந்த 2017 ஆண்டு அக்கல்லுாரி தன்னிச்சையாக மாணவர்களை சேர்த்த வகையில் கோர்ட் உத்தரவின்படி 13 சீட்டுகளை அரசு ஒதுக்கீடாக தர உள்ளது. எனவே பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் இந்தாண்டு 70 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக நிரப்பப்பட உள்ளன.அடுத்து மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி கடந்தாண்டு 92 சீட்டுகளை தந்திருந்தது. இந்தாண்டு கூடுதலாக 1 சீட்டினை தர முன்வந்துள்ளதால் அக்கல்லுாரியில் இந்தாண்டு 93 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக நிரப்பப்படுகின்றது.மூன்றாவதாக வெங்கடேஸ்வரா கல்லுாரியில் கடந்தாண்டு 91 சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்ட சூழ்நிலையில் கூடுதலாக இந்தாண்டு ஒரு எம்.பி.பி.எஸ்., சீட்டினை தர முன்வந்துள்ளது. எனவே இந்தாண்டு அக்கல்லுாரியில் 92 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக நிரப்பப்பட உள்ளன. இதை தவிர அரசு மருத்துவ கல்லுாரியை பொருத்தவரை மொத்தமுள்ள 180 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளில் 131 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது. கடந்தாண்டு இந்த நான்கு மருத்துவ கல்லுாரிகளில் ஒட்டுமொத்தமாக 371 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக நிரப்பப்பட்ட சூழ்நிலையில் இந்தாண்டு 386 சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக நிரப்பப்பட உள்ளது. கடந்தாண்டை காட்டிலும் கூடுதலாக 15 சீட்டுகள் நிரப்பப்பட உள்ளது, விரைவில் இட ஒதுக்கீடு ரீதியாக அரசு ஒதுக்கீட்டு பட்டியலை சென்டாக் வெளியிட உள்ளது.