அரசு கல்லுாரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
புதுச்சேரி: அரசு கல்லுாரி பேராசிரியர்கள் வரும் 2ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளனர். புதுச்சேரி அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் துணைப் பேராசிரியர்களுக்குக் கடந்த 15 ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்காமல் உயர்கல்வித்துறை தாமதப்படுத்தி வருகின்றது. இதனைக் கண்டித்து கல்லுாரி பேராசிரியர்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். நேற்று பதவி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தாகூர் அரசு கலைக்கல்லுாரி நுழைவு வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது வரும் 2ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளனர். அரசு கல்லுாரி பேராசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், இணை ஒருங்கிணைப்பாளர் சங்கரையா ஆகியோர் கூறியதாவது: புதுச்சேரி, காரைக்கால், மாகி , ஏனாம் பிராந்தியங்களில் ஏழு கல்லுாரிகள் உள்ளன. இதற்கு உரிய துணைப் பேராசிரியர்களை யு.பி.எஸ்.சி., தேர்ந்தெடுத்து அனுப்புகின்றது. இவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டுமுறை, பதவி உயர்வு குறித்த கோப்புகளைத் தயாரித்து அரசுக்கு அனுப்பவேண்டியது உயர்கல்வித்துறையின் பணியாகும். இதனை கடந்த பதினைந்து ஆண்டுகளாக முறைப்படி செயல்படுத்தி பதவி உயர்வு வழங்கவில்லை. இதனால் பலர் பணி ஓய்வுபெற்றுவிட்டனர். பலர் இறந்துவிட்டனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பலர் ஓய்வுபெற உள்ளனர். கவர்னர், முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் என பலமுறை மனு கொடுத்தும், பல போராட்டங்களை நடத்தியும் உரிய பதவி உயர்வு இதுவரை கிடைக்கவில்லை. புதுச்சேரி அரசு கல்லுாரிகளில் துணைப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் இருநுாற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு இணைப்பேராசிரியர் பதவி உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி வரும் 2ம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.