சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் கவர்னர் துவக்கி வைப்பு
புதுச்சேரி: இந்திய விளையாட்டு ஆணையம் புதுச்சேரி கிளை, காவல்துறை சார்பில், 100வது ‘பிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கடற்கரை சாலை, காந்தி சிலை எதிரே நடந்த சைக்கிள் ஊர்வலத்தை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, கவர்னர் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை வசிக்க, பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, இளைஞர்களும், பொதுமக்களும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி, ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறு வலியுறுத்தினார். இதில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், இந்திய விளையாட்டு ஆணைய இணை இயக்குநர் ரவிசங்கர், புதுச்சேரி விளையாட்டு துறை இயக்குநர் சுதாகர், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், ராகவ், நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி.,க்கள், போலீசார், இளைஞர்கள், மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில், ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான இந்தியாவை உருவாக்க, தினமும் உடற்பயிற்சி, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து மற்றும் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது.