மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : தேசிய ஊட்டச்சத்து வாரம்
01-Sep-2025
புதுச்சேரி : குடும்பத்தோடு நேரத்தை செலவழித்தால் மன அழுத்தம் குறையும் என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார். புதுச்சேரி கம்பன் கலையரங்கில், அரசு சார்பில், நடந்த தேசிய ஊட்டச்சத்து மாத துவக்க விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது: நாட்டின் முன்னேற்றம் ஆரோக்கியமான மக்களிடத்தில் இருந்து துவங்குகிறது. பல ஆண்டுகளுக்கு முன் பழங்குடியின குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மிகவும் ஒல்லியாகவும், வயிறு உப்பி இருப்பர். ஆனால், நாட்டில், ஐ.சி.டி.எஸ்., திட்டம் செயல்படுத்திய பின், அதிலிருந்து வெளியே வந்து விட்டோம். குழந்தையில் நமக்கு கிடைக்கும் உணவின் தரம், ஊட்டச்சத்து நமது வாழ்நாள் முழுதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடல் பருமனை குறைத்தல், சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாட்டை குறைத்தல் என்பதே இந்த ஆண்டின் தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் மையக் கருத்து. இந்தியாவில் 8 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், நானும் ஒருவன். நகர பகுதிகளில் வாழும் மக்களிடம் உடல் பருமன் விகிதம் கவலை அளிக்கிறது. இதற்கு காரணம் சரிவிகித சத்து இல்லாதது, தவறான உணவு பழக்கம். அதிக உப்பு, சர்க்கரை, எண்ணெய் எடுத்துக் கொள்வதே. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் 'பாஸ்ட் புட்'டை நோக்கி செல்கின்றனர். அதனால், இளம் வயதிலேயே உடல் பருமன் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்காக நாம் வாழ்வது இல்லை. வாழ்வதற்காகத் தான் நாம் சாப்பிட வேண்டும். உப்பு, சர்க்கரை, எண்ணெய் அளவை சரிபார்க்க வேண்டும். உணவில் அதிக அளவில் காய்கறி, பழம், முழு தானியங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 30 நிமிடம் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது போன்ற உடற்பயிற்சி செய்ய வேண்டும். யோகா, நமது மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவும். குடும்பத்தோடு நேரத்தை செலவழித்தால் மன அழுத்தம் குறையும். இந்த விழிப்புணர்வை பள்ளி, கல்லுாரி என, அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், என்றார்.
01-Sep-2025