மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையின் உருவம் கவர்னர் கைலாஷ்நாதன் பெருமிதம்
புதுச்சேரி: மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து சமுதாயம் கற்றக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளதாக கவர்னர் கைலாஷ் நாதன் பேசினார். சமூக நலத்துறை சார்பில், நடந்த சர்வ தேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் அவர் பேசியதாவது: தன்னம்பிக்கை என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னால் அது மாற்றுத்திறனாளி என்று இருக்க வேண்டும். காரணம், மாற்றுதிறன் உள்ளவர்கள் தன்னம்பிக்கையின் உருவமாக உள்ளனர். ஒரு மனிதனை, அவனுடைய லட்சியத்தை - அவனது உடம்பு தீர்மானிக்க முடியாது. அவனுடைய கனவும், தன்னம்பிக்கையும் தான் தீர்மானிக்க முடியும். மாற்றுத்திறனாளி, வாழ்க்கையில் தினமும் சந்திக்கும் சவால்கள் ஏராளம். இந்த சமூகத்தின் பார்வையே அவர்களுக்கு பெரும் தடையாக உள்ளது. ஆனால், அதனையெல்லாம் தாண்டி, தன்னம்பிக்கையோடு முன்னேறுபவர்கள் தான் மாற்று திறனாளிகள். அதனால் தான் சொல்கிறேன். தன்னம்பிக்கை என்ற வார்த்தைக்கு அர்த்தம் மாற்றுத் திறனாளி என்று இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. முடியாது என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் தருபவர்கள் இவர்கள். உடம்பில் குறை இருந்தாலும் - தனது செயலால், இந்த உலகத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வருகிறார்கள். இவர்கள், நமக்கு சொல்லும் செய்தி, உடம்பில் உள்ள குறைபாடு வாழ்க்கையின் இலக்கை, லட்சியத்தை தீர்மானிக்க முடியாது. மாற்றுத்திறனாளிகள் பல துறைகளில் சாதனை செய்து வருகின்றனர். கலை, இலக்கியம், தொழில்நுட்ப துறையில் புதிய புதிய பாதைகளை உருவாக்குகிறார்கள். விளையாட்டில் திறமையை நிரூபித்து பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் தான் அவர்கள் வாழ்க்கையின் ஆதாரம். மாற்றுத்திறனாளிக்கு அரசு செய்யும் உதவி, சலுகை அல்ல. அது அவருடைய உரிமை' என்றார்.