ஆரோக்கியமான தீபாவளி சுகாதாரத்துறை அறிவுரை
புதுச்சேரி: தீபாவளி காலத்தில் மக்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டி, புதுச்சேரி சுகாதாரத்துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளது. சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் செய்திக்குறிப்பு; சட்ட பூர்வமான, பசுமை பட்டாசுகள், உரிய அனுமதி பெற்ற விற்பனை யாளர்களிடமிருந்து மட்டுமே வாங்குவது, வீட்டின் அருகில், பள்ளி வாசல், மருத்துவமனை, பள்ளி போன்ற அமைதி பகுதிகளில் அல்லாமல், திறந்த வெளியில் பட்டாசு வெடிப்பது பாதுகாப்பானதாகும். எளிதில் தீப்பிடிக்கும் பாலியஸ்டர் ஆடைகளுக்கு பதிலாக, பருத்தி ஆடைகளை அணிவது பாதுகாப்பானது. தீயை அணைக்க, தண்ணீர் மற்றும் மணலை அருகில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே சிறுவர்களை பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். வீட்டில் சிறுவர், முதியவர்கள் இருந்தால், ஜன்னல், கதவுகளை மூடி, புகை புகாத படி பார்த்து கொள்ளவும். தீபாவளி நாளில் காற்று மாசு அதிகரிப்பதால் முகக்கவசம் அணிய வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் பட்டாசு புகையில் இருந்து விலகி இருக்க இன்ஹேலரை அருகில் வைத்திருக்க வேண்டும். பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாட்டை குறைக்கலாம். வெடித்த பட்டாசு, எரிந்த கம்பி மத்தாப்புகள் ஆகியவற்றின் மீது தண்ணீரை ஊற்றி நனைத்து தனியே சேகரிப்பதன் மூலம் தீக்காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். பாதுகாப்பும், சுற்றுச்சூழல் அக்கறையுடன் கூடிய தீபாவளி கொண்டாட்டம் உங்கள் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். இவ்வாறு அவர், கூறியுள்ளார்.