கனமழை எச்சரிக்கை எதிரொலி காரை மாவட்ட நிர்வாகம் உஷார்
காரைக்கால்: காரைக்காலில் கனமழை முன்னொச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. அதனையொட்டி, மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மணிகண்டன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், மாவட்டத்தில் கனமழையின் போது தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் கிடைத்திட அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். இதற்காக வருவாய் மற்றும் உள்ளாட்சி துறைக்கு போதிய நிதி வழங்கப்படும் என, கலெக்டர் தெரிவித்தார்.பொதுமக்கள் தங்களது முக்கியமான ஆவணங்கள் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைத்திட வேண்டும். வானிலை ஆய்வு மைய முன்னெச்சரிக்கை தகவல் அவ்வப்போது மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்படும். வதந்திகளை நம்ப வேண்டாம். மாவட்ட நிர்வாகம் சார்பில், வெளியிடும் அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும்.