தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் அறிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது; இந்திய தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட நிமிடத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. புதுச்சேரியில் திறந்த வெளி, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர், விளம்பர பலகை உள்ளிட்டவை அகற்றும் பணிகள் துவங்கி விட்டது. புதுச்சேரியில் வங்கி பாதுகாப்புக்கு பயன்படுத்தும் ஆயுதங்களை தவிர்த்து அரசு அனுமதியுடன் 196 பேர் ஆயுதம் வைத்துள்ளனர். இதில், 50 சதவீதம் பேர் ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் ஒப்படைத்து வருகின்றனர். பறக்கும்படை, சோதனை சாவடிகளில் உள்ள கண்காணிப்பு குழு பணி துவங்கி விட்டது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் கலெக்டர் அலுவலகம், மாகி, ஏனாம் மண்டல அலுவலகங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பத்திரிக்கை, மீடியா, சமூக வலைத்தளங்களில் வரும் தேர்தல் தொடர்பான விளம்பரம் கண்காணிக்கப்படும்.புதுச்சேரியில் ஆண் வாக்காளர்கள் 4,79,329, பெண் வாக்காளர்கள் 5,41,437, மூன்றாம் பாலினத்தவர் 148, சேவை வாக்காளர் 308 பேர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) 363 பேர் என மொத்தம், 10,20,914 பேர் உள்ளனர்.மொத்தம் 967 ஓட்டுச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதில், 15 ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டும், 75 ஓட்டுச்சாவடிகள் பெயர்களில் சிறிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 237 ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்த ஓட்டுச்சாவடியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். 967 ஓட்டுச்சாவடிகளும் சி.சி.டி.வி. நேரடி ஒளிபரப்பு மூலம் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்.தேர்தல் பணியில் 5,937 அரசு பணியாளர்களும், 4745 போலீசார், 12 கம்பெனி (1100) மத்திய ஆயுதப்படை போலீசார் ஈடுப்பட உள்ளனர். சிறப்பு ஓட்டுச்சாவடிகள்
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஓட்டுச்சாவடி விதம், முழுதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் மகளிர் ஓட்டுச்சாவடி 30 அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 3, காரைக்காலில் ஒன்று விதம் இளம் அரசு ஊழியர்கள் கொண்டு இயங்கும் யூத் ஓட்டுச்சாவடி, 4 ஓட்டுச்சாவடி மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களால் நிர்வகிக்கப்படும். 12 மாதிரி ஓட்டுச்சாவடிகளும், பிராங்கோ தமிழ் கட்டடக்கலை பாரம்பரியத்தில் மறுசீரமைக்கப்பட்ட வா.உ.சி., பள்ளி தனித்துவ ஓட்டுச்சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவுக்கு தேவையான எம் 3 ஒட்டுப்பதிவு இயந்திரம், வி.வி.பாட் இயந்திரம் போதிய அளவில் உள்ளது. வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான தகவல்களை 1903 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி மூலம் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். சி-விஜில்
தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் செலவின விதிமீறல்கள் தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் பொதுமக்கள் சி-விஜில் மொபைல் செயலி மூலம் புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளித்தவர் பெயர் ரகசியமாக வைக்கப்படும். புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 28,403 புதிய வாக்காளர்கள்
லோக்சபா தேர்தலில் இந்த முறை 28,403 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் துறை வழங்கும் புகைப்பட வாக்காளர் சீட்டு (பூத் ஸ்லீப்) ஓட்டு அளிக்க ஆவணமாக எடுத்து கொள்ளப்படாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார், லைசன்ஸ் உள்ளிட்ட புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களை ஓட்டு அளிக்க பயன்படுத்தலாம். வழக்குகள்
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது மொத்தம் 145 தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில், 24 வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 121 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. 2019 லோக்சபா தேர்தலின்போது, 46 தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவானது. இதில், 20 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு, 26 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது என தெரிவித்தார்.பேட்டியின்போது, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் குலோத்துங்கன், துணை தேர்தல் அதிகாரி தில்லைவேல் உடனிருந்தனர்.தேர்தல் நடத்தை அமலுக்கு வந்துள்ளதால் சாராயம், மதுபான கடை, பார், ரெஸ்டோ பார், சுற்றுலா பிரிவு என அனைத்து வகையான மதுபான கடைகளும் இரவு 10:00 மணிக்குள் மூடப்படும். இரவு நேரத்தில் மதுபானங்கள் கடைகளுக்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.