உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரிப்பு அபராத தொகை குறைவு: வசூலை தீவிரப்படுத்த முடிவு

போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரிப்பு அபராத தொகை குறைவு: வசூலை தீவிரப்படுத்த முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை கடந்த ஆண்டை விட ரூ. 73 லட்சம் குறைவாக வசூல் ஆனதால், மீதமுள்ள 20 நாட்களில் அதிகபட்ச அபராதம் விதிக்க போலீசாருக்கு சீனியர் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரியில் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சாலை விரிவாக்கம் இல்லாததால் கடும் டிராபிக் ஜாம் ஏற்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து விதிமீறல் சாதாரணமாக நடக்கிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக பயணம், சீட் பெல்ட் , மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, எதிர் திசையில் செல்வது, மொபைல்போன் டிரைவிங், அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி செல்லுதல், சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்வோர் மீது இ-சாலன் மூலம் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு மட்டும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுப்பட்ட 1,57,853 வாகன ஓட்டிகளுக்கு சலான்கள் வழங்கி 3.56 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்தனர்.இந்தாண்டு நவ., மாதம் வரை போக்குவரத்து விதிமீறலில் ஈடுப்பட்ட 2,32,692 பேருக்கு சலான் வழங்கி 2.83 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. வழக்குகள் அதிகரித்தாலும், அபராதம் கடந்த ஆண்டை விட 73 லட்சம் ரூபாய் குறைவு.இதனால் அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கும், சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; போக்குவரத்து விதிமீறல் அபராதம் வசூல் கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைவாக உள்ளது.எனவே, உச்சநீதிமன்றத்தின் சாலை பாதுகாப்பு கமிட்டியின் பரிந்துரைப்படி, போக்குவரத்து விதிமீறலில் ஈடுப்படும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்க வேண்டும். இந்தாண்டு முடிய இன்னும் 20 நாட்களே உள்ளதால், மீதமுள்ள நாட்களில் அனைத்து போலீசாரும் அதிகபட்ச அளவு இ-சலான் மூலம் அபராதம் விதித்து வசூல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.எனவே, போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் அபராதம் விதிக்க தயாராகி விட்டனர். வாகன ஓட்டிகள் ஹெல்மெட், சீட்பெல்ட், மொபைல்போன் டிரைவிங் உள்ளிட்ட விதிமீறல் இன்றி வாகனம் ஓட்டினால் போலீசாரின் அபராத வேட்டையில் இருந்து தப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை