சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ரத்து செய்யவேண்டும்: இண்டி கூட்டணி தேர்தல் அதிகாரியிடம் மனு
புதுச்சேரி: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ரத்து செய்யவேண்டி இண்டி கூட்டணி சார்பில், தலைமை தேர்தல் அதிகாரியிடம்மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தி.மு.க., அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூ., சலீம், மா.கம்யூ., ராமச்சந்திரன், வி.சி.க., தேவபொழிலன் உள்ளிட்ட இண்டிய கூட்டணி நிர்வாகிகள், நேற்று தலை மை தேர்தல் அதிகாரி ஜவகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியில், 2002ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலை ஆவணமாக பயன்படுத்துவது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இடம் மாறுதல் குறித்த படிவமாகிய நான்காம் இணைப்பில், வெளி மாநிலத்திலிருந்து மாற்றம் என்று இருப்பது, சட்டவிரோதஓட்டுதிருட்டுக்கு வழிவகை செய்யும். நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக் காளர் பட்டியல் அவசியம் என்பதை இண்டி கூட்டணி மறுக்க வில்லை. ஆனால், அதற்கு உரிய கால அவகாசம் வழங்காமல், தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அவசரகதியில், திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரமாகவே தோன்றுகிறது. எனவே, தற்போது முன்மொழியப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கைவிட்டு அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் பின்பற்றிய 2024ம் ஆண்டு வாக்காளர் பட்டியலையே அனைத்து நடைமுறைகளுக்கும் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் கூறுகையில்,ஓட்டுச்சாவடி அலுவலர் நிலையிலேயே குழப்பங்களுக்கு தீர்வுகள் கிடைத்துவிடும். ஓட்டுச்சாவடி அலுவலரும்மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்களும் இணைந்து,எந்த குழப்பமும் ஏற்படாத வகையிலும் தீர்வுகான, அதிகாரிகள் தயாராக உள்ளனர் என்றார்.