சர்வதேச ஒலிம்பியாட் தேர்வு: புதுச்சேரி மாணவர் சிறப்பிடம்
புதுச்சேரி: சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் புதுச்சேரி மாணவர் வெண்கலப் பதக்கம் வென்றார். அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை சார்பில், நடந்த சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த 18,600 பேர் உட்பட 72 நாடுகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.போட்டியின் வெற்றியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டில்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவில், 8 ஒலிம்பியாட் தேர்வுகளில் பங்கேற்ற 1 முதல் பிளஸ் 2 வரையில், சர்வதேச அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற வெற்றியாளர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி பதக்கம் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கினார்.அதில், 74 முதல்நிலை வெற்றியாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய், தங்கப் பதக்கம் மற்றும் தகுதிச் சான்றிதழ், 74 இரண்டாம் நிலை வெற்றியாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், வெள்ளிப் பதக்கம், 74 மூன்றாம் நிலை வெற்றியாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய், வெண்கலப் பதக்கம், தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.இதில், புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளி மாணவர் பாலபிரசாத், மூன்றாம் நிலை வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு, வெண்கலப் பதக்கம், தகுதி சான்றிதழ் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பெற்று சாதனை படைத்தார்.