வாஸ்து பிரச்னையா... வழி பிரச்னையா... தலைமை செயலக முகப்பு வழி திடீர் மூடல்
பு துச்சேரி அதிகாரிகளின் உச்ச அதிகார அமைப்பாக தலைமை செயலகம் உள்ளது. தலைமை செயலகத்தின் பிரதான வாயிலாக கிழக்கு பகுதி உள்ளது. இவ்வழியாக தலைமை செயலர், அரசு செயலர்கள் சென்று வருகின்றனர். மேற்பகுதியில் பின்புற வாயிலாக ஊழியர்கள், பார்வையாளர்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது திடீரென தலைமை செயலக பிரதான வழி மூடப்பட்டு, சைடு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வழியாக தலைமை செயலர், அரசு செயலர்கள் சிவப்பு கம்பள வரவேற்புடன் அலுவலகத்திற்கு சென்று வருகின்றன. வாஸ்து பிரச்னையால் தான் தலைமை செயலக வழி மூடப்பட்டு விட்டதாக தகவல் பரவியது. இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இதை யாருங்க கிளப்பி விட்டதுனு தெரியல. வாஸ்து பிரச்னையும்.. வழி பிரச்னையும் இல்லை. தலைமை செயலக முகப்பு கொஞ்சம் அழகாக இருக்கட்டும் என்று புனரமைப்பு பணி துவங்கியுள்ளோம். அதனால் தான் தலைமை செயலக பிரதான வழி மூடப்பட்டுள்ளது. சைடுவழி தற்காலிகமானது தான். கடற்கரை சாலையை பார்த்து இருக்கும் தலைமை செயலகத்தின் பிரதான வழி என்றைக்குமே மூடப்படாது' என்றனர்.